வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்த 'பாகுபலி 2' படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பின்பே இந்தியத் திரையுலகத்தில் 'பான் இந்தியா' படங்கள் என்பது பிரபலமானது. அதன்பிறகு வெளிவந்த கன்னடப் படமான 'கேஜிஎப் 2' படம் கூட 1000 கோடி வசூலை அள்ளியது. அதற்கடுத்து தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படம் 1000 கோடி வசூலைப் பெற்றது. ஹிந்திப் படமான 'ஜவான்' படமும் தென்னிந்தியாவிலும் வரவற்பைப் பெற்று 1000 கோடி வசூலைக் கடந்தது. இந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் கூட 1000 கோடி வசூலைத் தாண்டியது.
ஆனால், தமிழில் பான் இந்தியா படமாக வெளிவந்த எந்த ஒரு படமும் இதுவரையிலும் 1000 கோடி வசூலைக் கடக்கவில்லை என்பது இங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் குறையாக உள்ளது. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு வெளிவந்த கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்', விஜய் நடித்த 'லியோ, தி கோட்', மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 1, 2' ஆகிய படங்கள் அதிக வசூலைக் குவித்த படங்களாக அமைந்தன. ஆனால், அந்தப் படங்கள் வசூலித்த தொகை என்பது பெரும்பாலும் தமிழ்ப் பதிவுக்காகக் கிடைத்த வசூல் மட்டுமே.
பான் இந்தியா படங்களாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான அந்தப் படங்கள் அந்த மொழிகளில் சில பல கோடிகளை மட்டுமே வசூலித்தது. மற்ற மொழிகளிலிருந்து தமிழிலும் டப்பிங் ஆகி பான் இந்தியா படங்களாக தமிழகத்தில் வெளியான படங்களின் வசூலைக் கூட அந்தப் படங்கள் மற்ற மாநிலங்களில் பெற முடியவில்லை.
நாளை வெளியாக உள்ள 'கங்குவா' படம் அந்தக் குறையைப் போக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தை பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் இந்தியா முழுவதிலும், மற்றும் வெளிநாடுகளிலும் 11,000 தியேட்டர்களுக்கும் அதிகமாக வெளியிடுகிறார்கள்.
சூர்யா தவிர, ஹிந்தி நடிரான பாபி தியோல், ஹிந்தி நடிகையான திஷா பதானி இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அதனால், ஹிந்தி ரசிகர்களிடம் போய்ச் சேர வாய்ப்புள்ளது. மேலும், இந்தப் படத்திற்காக நடிகர் சூர்யா இந்தியா முழுவதும், சில வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து படத்தை புரமோஷன் செய்தார்.
சரித்திரமும், சயின்ஸ் பிக்ஷனும் கலந்த 'பேன்டஸி' படமாக ஒரு பான் இந்தியா படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் இந்தப் படத்தில் உண்டு என படக்குழுவினர் பல பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்கள். படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தினால் தமிழில் அதிக வசூலைப் பெறக் கூடிய முதல் படமாக அமையலாம்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா அவருடைய முதல் பேட்டியில் சொன்னது போல 2000 கோடி வசூலிக்கிறதோ இல்லையோ 1000 கோடி வசூலித்து சாதனை படைக்குமா என்பதே தமிழ்த் திரையுலகினரின், ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தப்பிக்குமா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் கங்குவா படம் மூலம் சூர்யாவை தியேட்டரில் காண உள்ளனர் ரசிகர்கள். 3டி, கிராபிக்ஸ் காட்சிகள் என பிரமாண்டமாய் இரண்டாண்டு கால உழைப்பாக இப்படம் வெளியாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக கடைசியாக வெளிவந்த தங்கலான் படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. மேலும் தொடர்ச்சியாக நிதி தொடர்பான வழக்குகளிலும் இந்நிறுவனம் சிக்கி வருகிறது. அதனால் கங்குவா படத்தை பெரிதும் நம்பி உள்ளனர். பான் இந்தியா வெளியீடாக சுமார் 11 ஆயிரம் தியேட்டர்களில் இப்படம் உலகம் முழுக்க வெளியாக உள்ளது. படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றால் இந்நிறுவனம் தப்பிக்கும். இல்லையேல் மேலும் நிதி சிக்கலுக்கு ஆளாக நேரிடும்.