கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
சினிமா வெளியீடு நாட்களில் எப்போதுமே தீபாவளி நாளுக்கென்று தனி சிறப்பு உண்டு. அன்றைய தினம் படம் வெளியாவதை பல நடிகர்களும் விரும்புவார்கள். ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் ரசிகர்கள் எப்படியும் படத்திற்கு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம்.
தீபாவளி நாளில் பொதுவாக டாப் நடிகர்களின் படங்கள்தான் அதிகம் வரும். கடந்த ஐந்து வருடங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் 2019 தீபாவளிக்கு விஜய் நடித்த 'பிகில்' திரைப்படமும், 2021 தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படமும், 2015 தீபாவளிக்கு அஜித் நடித்த 'வேதாளம்' படமும், கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படங்களும் வெளிவந்தது. அதன்பின் கடந்த இரண்டு வருடங்களாக ரஜினி நடித்த படமும், ஐந்து வருடங்களாக விஜய் நடித்த படமும், கடந்த 9 வருடங்களாக அஜித் நடித்த படமும், கமல்ஹாசன் நடித்த படமும் தீபாவளிக்கு வெளியாகவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி ரிலீஸ் என்பது டாப் 5 நடிகர்களின் படங்கள் இல்லாமல்தான் போய்க் கொண்டிருக்கிறது. அது இந்த வருடமும் தொடர்கிறது. 2022ம் வருட தீபாவளிக்கு 'பிரின்ஸ், சர்தார்' படங்களும், 2023ம் வருட தீபாவளிக்கு 'ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள்தான் வந்தன. இந்த வருடமும் அதேதான் தொடர்கிறது. ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், கவின் ஆகியோர் நடித்துள்ள நேரடித் தமிழ்ப் படங்கள் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது.
அமரன்
தயாரிப்பு - ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - ராஜ்குமார் பெரியசாமி
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - சிவகார்த்திகேயன், சாய் பல்லவி
நேரம் - 2 மணி நேரம் 49 நிமிடம்
சென்சார் சான்றிதழ் - யுஏ
நடிகர் கமல்ஹாசன் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் எப்போதாவது மற்ற நடிகர்களையும் வைத்து படங்களைத் தயாரித்தார். கடந்த 20 வருடங்களில் 2003ல் மாதவன் நடித்த 'நளதமயந்தி', 2019ல் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களைத் தயாரித்தார். ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
வளரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்க கமல்ஹாசன் படம் தயாரிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியான போதே திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தார்கள். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக இப்படம் தயாராகி உள்ளது. அவரது கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயன் ஏற்று நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி முதல் முறையாக இணைந்துள்ளார். படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் டிவி நிகழ்ச்சியில் ஒரு காலத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் ஒன்று சேர்ந்துள்ளனர்.
படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளிவந்த பின் ரசிகர்களுக்கு படம் மீதான ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதை முன்பதிவுக்கான வரவேற்பை வைத்தும் புரிந்து கொள்ள முடிகிறது. பயோபிக் என்பதையும் மீறி சினிமாவுக்கான விஷயங்களும் யதார்த்தம் மீறாமல் படத்தில் இருந்தால் அதிக வரவேற்பைப் பெறலாம். படம் வெளிவந்த பின் சிவகார்த்திகேயனின் இமேஜ் வளர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. 2022ல் வெளிவந்த 'டான்' படத்திற்குப் பிறகு இந்தப் படம் மூலம் மீண்டும் 100 கோடி வசூலை சிவகார்த்திகேயன் கடந்தால்தான் அவரது வியாபார வட்டமும் வளரும். படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இளம் கலைஞர்களை நம்பி களத்தில் இறங்கிய கமல்ஹாசன் இந்தப் படத்தயாரிப்பில் சில சிக்கல்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டார் என்பது கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட தகவல். அதையெல்லாம் படத்தின் வெற்றி மட்டும்தான் மறக்கச் செய்யும்.
பிரதர்
தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - எம் ராஜேஷ்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு - ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
சென்சார் சான்றிதழ் - யு
“சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி” என தனது ஆரம்ப காலத்தில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தவர் இயக்குனர் எம் ராஜேஷ். அதன்பின் அவர் இயக்கிய ஐந்து படங்களுமே தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதில் கடைசியாக இயக்கிய 'வணக்கம்டா மாப்ளே' படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக டிவியில் வெளியாகி திரையிடப்பட்டது. அப்படி ஒரு படம் ஒளிபரப்பானது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது ஆச்சரியம்தான்.
இருந்தாலும் தனது முயற்சியில் சிறிதும் தளராமல் 'பிரதர்' படத்தை எடுத்து முடித்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். அவருக்கே உரிய குடும்பப் பாங்கான நகைச்சுவைத் திரைப்படமாகத்தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறதாம். அவருடன் ஜெயம் ரவி முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். 'கோமாளி' படத்திற்குப் பிறகு தனி நாயகனாக நான்கு படங்களில் நடித்தும் வெற்றியைத் தர முடியாமல் தவித்து வருகிறார் ரவி. இந்த 'பிரதர்' அவருக்கு பிரமாதமாக அமையும் என எதிர்பார்க்கிறார்.
ராஜேஷின் முதல் மூன்று படங்களில் பாடல்களும் அப்போதைக்கு சூப்பர் ஹிட்டாகின. முதல் இரண்டு படங்களுக்கு யுவன் இசை, மூன்றாவது படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை. சுமார் 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராஜேஷ் - ஹாரிஸ் கூட்டணி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
கடந்த பத்து வருடங்களாகவே ஹாரிஸுக்கு படங்கள் குறைந்துவிட்டன. கடந்த வருடம் அவரது இசையில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த வருடத்தின் முதல் படமாக இந்தப் படம் வருகிறது. ஏற்கெனவே இப்படத்தின் பாடலான 'மக்காமிஷி' ஹிட்டாகியுள்ளது. ஹாரிஸுக்கு இப்படம் ஒரு 'கம் பேக்' படமாக இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதர்பார்க்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீட்டிற்கு சட்ட ரீதியாக சிக்கல் ஒன்று வந்துள்ளது. அதை சரி செய்து படத்தை வெளியிடுவார்களா என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.
ப்ளடி பெக்கர்
தயாரிப்பு - பிலமென்ட் பிக்சர்ஸ்
இயக்கம் - சிவபாலன் முத்துக்குமார்
இசை - ஜென் மார்ட்டின்
நடிப்பு - கவின், ரெடின் கிங்ஸ்லி, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன்
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
சென்சார் சான்றிதழ் - யுஏ
“கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்” ஆகிய நான்கு படங்களை இயக்கிய நெல்சன் தயாரித்திருக்கும் முதல் படம். இவ்வளவு சீக்கிரத்தில் அவர் தயாரிப்பாளராகி வளரும் நடிகருக்கும், தனது உதவியாளருக்கும் பட வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
டிவி சீரியலில் நடித்து, பிக் பாஸ் போட்டியில் இன்னும் பிரபலமாகியவர் கவின். ஐந்து வருடங்களுக்கு முன்பே கதாநாயகனாக அறிமுகமானாலும் ஓடிடியில் வெளிவந்த 'லிப்ட்' படமும், தியேட்டர்களில் வெளிவந்த 'டாடா' படமும் அவருக்கு தமிழ் சினிமாவில் நாயகனாகவும் ஒரு இடத்தைக் கொடுத்தது. இந்த வருடம் வெளிவந்த 'ஸ்டார்' படம் லாபம் என்று சொல்லிக் கொண்டார்கள். இருந்தாலும் அடுத்தடுத்து தமிழில் அவருக்கு சில நல்ல படங்கள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியது.
அதில் முதலாவதாக வரப் போகும் படம் இது. இதற்கடுத்து 'கிஸ், மாஸ்க், நயன்தாராவுடன் ஒரு படம்' என அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாக உள்ளன. குறுகிய காலத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். பிச்சைக்காரனாக அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் நடிக்க மாட்டார்கள். அந்த இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடித்துள்ளார் கவின்.
அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவர்கள் தரும் நம்பிக்கை, இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த நெல்சனின் நம்பிக்கை எப்படியும் படத்தைக் காப்பாற்றிவிடும் என்று கவின் மட்டுமல்ல மற்றவர்களும் நம்புகிறார்கள். டிரைலரைப் பார்த்த பின் 'அடுத்த வாரிசு' படத்தின் சாயல், ஹாலிவுட் படத்தின் சாயர் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. படம் எந்த சாயலில் இருக்கப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.
மேலே சொன்ன மூன்று நேரடி தமிழ்ப் படங்களைத் தவிர, துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' என்ற தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியுள்ள படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்த வருட தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை உள்ளது. இளம் ரசிகர்களைக் கவரக் கூடிய நடிகர்களின் படங்களாகவே இந்த வருட தீபாவளி வெளியீடுகள் அமைந்துள்ளன. ஒன்றுக்கொன்று மாறுபட்ட படங்கள் என்பது டிரைலரைப் பார்த்ததும் தெரிகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படங்களாக அவை இருந்தால் வெற்றியும், வசூலும் நிச்சயம்.