வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிப்பின் இலக்கணம், நடிப்பின் அகராதி, நடிப்பின் பல்கலைக்கழகம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து ஓவர் ஆக்டிங் என்று சொல்லும் ஒரு சாரார் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். நடிப்பில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, நடுத்தரமான நடிப்பு, குறைவான நடிப்பு என ஒன்றும் கிடையாது. கதையின் போக்கு அறிந்து, காட்சியின் தன்மையை உள்வாங்கி, அந்த கதாபாத்திரத்திற்கான உடல் மொழியையும், வசன உச்சரிப்பையும் வழங்கி அந்தக் காட்சிக்கு உயிர் கொடுப்பவனே மகா கலைஞன். அப்படி ஒரு தலைசிறந்த கலைமேதைதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
உதாரணத்திற்கு இயக்குநர் எல்.வி.பிரசாத் இயக்கிய “இருவர் உள்ளம்” என்ற திரைப்படத்தில் சிவாஜியும், நடிகை பி சரோஜா தேவியும் தோன்றி நடிக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், திடீரென இயக்குநர் எல்.வி பிரசாத் கட் என சொன்னார். சிவாஜியை தனியே அழைத்துக் கொண்டு சென்று, ‛‛நீ நல்ல நடிகன், நன்றாக நடிக்கின்றாய், நீ நன்றாக நடித்தால் காட்சியும் நன்றாகவே வரும் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் நீ இந்தக் காட்சியில் நன்றாக நடித்தால், நாம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காட்சி வீணாகி விடும். காரணம், இந்தக் காட்சியில் நடிகை சரோஜாதேவி தான் ஆளுமை செலுத்தி நடிக்க வேண்டும். நீ பேசாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தக் காட்சி நன்றாக இல்லாமல் படத்தின் தோல்விக்கே காரணமாகிவிடும் என்று சொல்லி உள்ளார். அதன்படி தனது நடிப்பாற்றலை முற்றிலும் குறைத்துக் கொண்டு உடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கு ஒத்துழைப்புத் தந்து, இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் தான் சிவாஜி.
இந்த அனுபவத்தை மனதிற் கொண்டுதான் பின்னாளில் வந்த “கௌரவம்” திரைப்படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்தாகவும், மகன் கண்ணனாகவும் என இரட்டை வேடமேற்று தானே நடிக்க வேண்டும் என முடிவும் எடுத்தார். காரணம் பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரம் நன்றாக நடிக்கும் போது, மகன் கண்ணன் கதாபாத்திரமும் நன்றாக நடித்தாக வேண்டும். மகன் கண்ணன் கதாபாத்திரத்திற்கு வேறொரு நடிகரை நடிக்க வைத்திருந்தால், அவர் பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தைவிட நன்றாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நன்றாகவே நடிப்பார். அவரை அந்த இடத்தில் நீங்கள் குறைவான நடிப்பை வெளிப்படுத்துங்கள் என நாம் கூறவும் முடியது. அவ்வாறு அவர் நன்றாக நடிக்கும் பட்சத்தில், பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதபாத்திரம் அங்கு அடிபட்டுப் போய்விடும்.
அதேபோல் மகன் கண்ணன் கதபாத்திரம் நன்றாக நடிக்க வேண்டிய காட்சியில், பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரம் நன்றாக நடித்துவிட்டால், கண்ணன் கதாபாத்திரம் அங்கு அடிபட்டுப் போய்விடும். இவ்வாறு காட்சிக்கு காட்சி இரண்டு கதாபாத்திரங்களின் நடிப்பையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் தான் நானே அந்த இரண்டு வேடங்களிலும் நடித்தேன். படம் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது என நடிகர் திலகம் சிவாஜியை தனது சுயசரிதையில் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறு கதைக்காகவும், கதாபாத்திரங்களுக்காகவும் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் இந்த அபூர்வ திரைக்கலைஞன் ஒரு நடிப்புலக மேதை என்பதில் எந்த ஐயமும் இல்லை.