நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

18வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நேற்று வெளியிடப்பட்டது. 7 கட்டமாக நடக்க உள்ள தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தமிழ் சினிமா வெளியீட்டுத் தேதிகளில் தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களுக்குப் பிறகு தமிழ்ப் புத்தாண்டு நாள் முக்கியமான வெளியீட்டு நாள். பள்ளிகளுக்கான தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை ஆரம்பமாகும் காலகட்டம். அதனால் அந்த நாளில் பல புதிய படங்கள் வெளியாகும். இந்த வருடம் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியன்று புதிய படங்கள் வெளிவர வாய்ப்பிருக்காது.
தேர்தல் முடிந்த பின் ஒரு வாரம் கழித்து ஏப்ரல் 26ம் தேதி வேண்டுமானால் புதிய படங்களை வெளியாகலாம். இருந்தாலும் தமிழ்ப் படங்கள் நன்றாக ஓடும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் தேதியையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாகவும், ஆந்திரா, தெலுங்கானாவில் மே 13ம் தேதி ஒரே கட்டமாகவும் நடக்க இருக்கிறது. ஏப்ரல் 14 முதல் மே 13 வரை சுமார் ஒரு மாத காலம் தென்னிந்தியாவில் லோக்சபா தேர்தல் காரணமாக பரபரப்பான பிரசாரம் நடைபெறும்.
எனவே, அந்த ஒரு மாத காலத்திற்கு தமிழில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் கூட புதிய படங்களை வெளியிடத் தயங்குவார்கள். மே 13ம் தேதிக்குப் பிறகுதான் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளை முடிவு செய்தாக வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதே காலகட்டங்களில் ஐபிஎல் போட்டிகளும் பரபரப்பாக நடைபெறும். அதனால், இந்த வருட கோடை விடுமுறை சினிமாவைப் பொறுத்தவரை சோகமான விடுமுறையாக அமையவே வாய்ப்புகள் அதிகம்.