மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மொழியை சிதைக்காமல், தெளிவான உச்சரிப்போடு, கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து உணர்வுபூர்வமாக பாடும் ஒரு சில பாடகியரில் ஒருவரும், தென்னகத்தின் “சின்னக்குயில்” அல்லது “கேரளத்தினின்டே வானம்பாடி” என்ற அடைமொழிக்கும் உரியவரான பின்னணிப் பாடகி சித்ரா அவர்களின் பிறந்த தினம் இன்று…
* கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் 1963ல் ஜுலை 27 அன்று, கிருஷ்ணன் நாயர் மற்றும் சாந்தகுமாரி தம்பதியரின் மகளாகப் பிறந்தார்.
* தந்தை கிருஷ்ணன் நாயர் வானொலி பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி சிறந்த வீணை இசைக் கலைஞராகவும் இருந்ததால், நல்ல இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த சித்ராவிற்கும், சிறுவயதிலேயே இசையின் மீது தாக்கம் அதிகமிருந்தது.
* தனது 5 வயதிலேயே அகில இந்திய வானொலியில் பாடியும் இருக்கிறார் சித்ரா. இவரது தந்தை கிருஷ்ணன் நாயரே இவருக்கு முதல் இசை குருவாகவும், ஆசானாகவும் இருந்திருக்கிறார்.
* பள்ளிப் பருவத்திலேயே பின்னணிப் பாடகர் கே ஜே ஏசுதாஸ் உடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்ற சித்ரா, 1979ஆம் ஆண்டு மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் எம் ஜி ராதாகிருஷ்ணன் மூலம் திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்று தனது திரையிசைப் பயணத்தை தொடங்கினார்.
* இசைத்துறையில் பிஏ இளங்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற சித்ரா, கேரள பல்கலைக்கழகத்தில் தனது எம்ஏ முதுகலையிலும் தேர்ச்சி பெற்றார்.
* ரவீந்திரன், ஷ்யாம், ஜெர்ரி அமல்தேவ், கண்ணனூர் ராஜன் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல மலையாளத் திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்து பாடவும் செய்தார்.
* 1986ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் இசையில், ஆர் செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த “நீதானா அந்தக் குயில்” திரைப்படத்தில் “பூஜைக்கேத்த பூவிது” என்ற பாடலை பாடியதன் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் சித்ரா.
* இதனைத் தொடர்ந்து “கீதாஞ்சலி”, “பூவே பூச்சூடவா”, “சிந்து பைரவி” என இளையராஜாவின் இசையில் பல தேனினும் இனிய பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்ததோடு, “சின்னக்குயில்” சித்ரா என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.
* “சிந்து பைரவி” திரைப்படத்தில் “பாடறியேன் படிப்பறியேன்”, “நானொரு சிந்து காவடிச் சிந்து” ஆகிய பாடல்களை சிறப்பாக பாடியதற்காக அந்த ஆண்டு “தேசிய விருது” வழங்கியும் கவுரவிக்கப்பட்டார் சித்ரா.
* இசையமைப்பாளர் கேவி மகாதேவன் இசையில் வெளிவந்த “பிரளயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் சித்ரா.
* கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், வி குமார், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார், மரகதமணி, மணிஷர்மா, சிற்பி, பரத்வாஜ், ஆதித்யன், பாலபாரதி, யுவன் சங்கர் ராஜா என தமிழிலும், நதீம் ஷ்ரவண், அனுமாலிக், ராஜேஷ் ரோஷன், நிகில் வினய் என ஹிந்தியிலும், அனைத்து ஜாம்பவான் இசையமைப்பாளர்களுடனும் பாடிய பெருமை மிகு பாடகியாக பார்க்கப்படுபவர் சித்ரா.
* தென்னிந்திய மொழிகளன்றி ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, துளு, பஞ்சாபி, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா எனவும், சிங்களம், மலாய், அரபு, லத்தீன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் என்று அயல்நாட்டு மொழிகளிலும் ஏறத்தாழ 25000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி, தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர்தான் “சின்னக்குயில்” சித்ரா.
* “பத்மஸ்ரீ விருது”, “தேசிய விருதுகள்”, “தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள்”, “கேரள மாநில சினிமா விருதுகள்”, “ஆந்திர மாநில சினிமா விருதுகள்”, “கர்நாடக மாநில சினிமா விருதுகள்”, “தென்னிந்திய பிலிம் பேர் விருது” என ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர், லண்டனில் உள்ள “ராயல் ஆல்பட் ஹால்”ல் மறைந்த லதா மங்கேஷ்கருக்குப் பின் இசை நிகழ்ச்சியில் பாடிய பெண் பாடகி என்ற பெருமையும் பெற்றவர்.
* புன்னகை சிந்தும் முகத்தோடும், பொலிவான தோற்றத்தோடும், புத்தம் புது பாடகியாய், நித்தம் இசை பாடி மகிழ்விக்கும் எங்கள் “சின்னக்குயில்” சித்ரா அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரைப் பற்றிய குறிப்புகளை பகிர்ந்து அவரை வாழ்த்தி நாம் அகம் மகிழ்வோம்.