மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அழகர் மலைக்கள்ளனாய் நுழைந்து, அனைவரது மனங்கவர்ந்த கள்வனாய் மாறிப்போன, ஆற்றல் மிகு கவிஞர், போற்றுதலுக்குரிய பாடலாசிரிர் “வாலிபக் கவிஞர்” வாலி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
1. திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில், 1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள், சீனிவாச அய்யங்கார் மற்றும் பொன்னம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார் கவிஞர் வாலி. இவரது இயற்பெயர் ரங்கராஜன்.
2. தனது பள்ளிப் பருவத்தில் ஓவியம் வரைவதில் ஆர்வமாய் இருந்த வாலிக்கு, ஓவியர் மாலியின் தாக்கம் இருந்ததால், தனது இயற்பெயரான ரங்கராஜன் என்ற பெயரை வாலி என்று மாற்றி அமைத்துக் கொண்டார்.
3. ஆரம்ப காலங்களில் அகில இந்திய வானொலி நிலையத்திலும், மேடை நாடகங்களிலும் தனது பணியை ஆரம்பித்த வாலி, சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.
4. 1959ஆம் ஆண்டு நடிகர் வி கோபாலகிருஷ்ணனின் உதவியோடு கன்னட நடிகர் கெம்ப்ராஜின் அறிமுகம் கிடைத்து, “அழகர்மலைக் கள்ளன்” என்ற படத்தில் முதன் முதலாக பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து ஒரு பாடலாசிரியராக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் வாலி.
5. தொடர்ந்து சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிவிடலாம் என்று எண்ணியபோது, கவிஞர் கண்ணதாசனின் பாடலான “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா” என்ற பாடலைக் கேட்டு தனது முடிவை மாற்றி மீண்டும் சினிமாவில் பாடல் எழுதும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார் வாலி.
6. ஒரு பாடலாசிரியராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வாலிக்கு, 'அரசு பிக்சர்ஸ்' மூலமாக இயக்குநர் ப நீலகண்டனிடம் இருந்து அழைப்பு வர, கிடைத்தது எம் ஜி ஆர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த “நல்லவன் வாழ்வான்” திரைப்பட வாய்ப்பு.
7. இந்தப் படத்திற்காக வாலி எழுதிய “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே” என்ற பாடல்தான் வாலி எம் ஜி ஆருக்காக எழுதிய முதல் திரைப்பட பாடல்.
8. பல தடைகள் குறுக்கீடுகளுக்கு இடையே “முக்தா பிலிம்ஸ்” பட நிறுவனத்திலிருந்து “இதயத்தில் நீ” என்ற திரைப்படத்திற்காக பாடல் எழுதும் வாய்ப்பு வாலியைத் தேடி வந்தது. படத்தின் இசையமைப்பாளரான எம் எஸ் விஸ்வநாதன் அனைத்து பாடல்களையும் வாலியின் வளமான வரிகளைக் கொண்டே மெட்டமைத்து பாடல்களை வெற்றி பெறச் செய்தார்.
9. எம் ஜி ஆரின் நல்லெண்ணமும், எம் எஸ் விஸ்வநாதனின் ஒத்துழைப்பும் கிடைக்க, வாலிக்கு கிடைத்தது “படகோட்டி” என்ற பம்பர் பரிசு. படத்தின் அனைத்து பாடல்களையும் வாலியே எழுதினார். எளிய தமிழில் இனிய இசையில் அமைந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
10. எம் ஜி ஆரின் மனம் அறிந்து அவருக்கான பாடல்களை புனைவதில் தனி கவனம் செலுத்தி, அதில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றவர் கவிஞர் வாலி.
11. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்”, “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்”, “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்”, “கண்போன போக்கிலே கால் போகலாமா”, “நான் செத்துப் பொழச்சவன்டா” என ரசிகர்களால் இன்றும் ஆரதிக்கப்படும் எம் ஜி ஆரின் தனிப்பாடல்கள் அனைத்தும் வாலியின் கைவண்ணத்தில் புனையப்பட்டவை.
12. எம் ஜி ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிலம்பரசன் என எல்லா தலைமுறைகளுக்கும் ஏற்ப பாடல்கள் எழுதியதாலேயே வாலிபக் கவியாக வாழ்ந்தும் மறைந்தார் கவிஞர் வாலி.
13. “பத்மஸ்ரீ விருது” உட்பட தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள் பல வென்றெடுத்த கவிஞர் வாலி, 15000க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கின்றார்.
14. “அவதார புருஷன்”, “பாண்டவர் பூமி”, “நானும் இந்த நூற்றாண்டும்”, “ராமானுஜ காவியம்”, “கிருஷ்ண விஜயம்” போன்றவைகள் வாலியின் இலக்கிய பணிக்கு சான்றுகள் ஆகும்.
15. “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற அவருடைய பாடல் வரிகளையே அவருக்கு புகழஞ்சலியாய் செலுத்தி, அவருடைய நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்தமைக்கு பெருமை கொள்வோம்.