மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையாக கடந்த சில வருடங்களாக அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நயன்தாரா. கேரள மாநிலம், திருவல்லா என்ற ஊரில் கிறிஸ்துவ குடும்பத்தில் 1984ம் ஆண்டு பிறந்தவர். டயானா மரியம் குரியன் என்பது நயன்தாராவிற்கு பெற்றோர் வைத்த பெயர். நயன்தாராவின் அப்பா இந்திய விமானப் படையில் பணியாற்றியதால் இந்தியாவில் உள்ள பல ஊர்களில் படித்து வளர்ந்தார் நயன்தாரா. ஆனால், கல்லூரிப் படிப்பை தனது சொந்த ஊரில் பயின்று, ஆங்கிலத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.
ஆரம்ப காலங்களில் மலையாள டிவிக்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் நயன்தாரா. அதன் பிறகு 'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் 2003ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2005ம் ஆண்டு சரத்குமார் ஜோடியாக 'ஐயா' படத்தில் அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ஹரி.
இரண்டாவது படமே ரஜினிக்கு ஜோடியாக 'சந்திரமுகி' படத்தில் நடித்ததால் உடனடியாக உச்ச நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற மெல்ல மெல்ல புகழின் உச்சிக்குச் சென்றார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமானார். ஆனாலும், தெலுங்கை விட தமிழில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். கடந்த 17 வருடங்களாக தமிழில் கதாநாயகியாக நடித்து வருவது சாதரண விஷயமல்ல.
அதிகம் கிளாமர் காட்டாத நாயகி ஒருவர் இவ்வளவு வருடம் தாக்குப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிலம்பரசன், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் என பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
வளர்ந்து வரும் போதே அதிகமாக கிசுகிசுக்களில் அடிபட்டவர் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதலில் இருந்தார். பிரபுதேவாவைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். ஆனால், திடீரென அத்திருமணம் நின்று போனது.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த 'நானும் ரௌடிதான்' படத்தில் நடித்த போது அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த ஆறேழு வருடங்களாக காதலித்து வந்து ஜோடி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தங்கள் ஜோடிப் புகைப்படங்களை பதிவிட்டு மற்றவர்களை பொறாமைப்பட வைத்தனர்.
இருவரும் திருமண நிச்சயம் செய்து கொண்ட நிலையில் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாளை சென்னைக்கு அருகில் மகாபாலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் அதிகாலையில் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சினிமாவில் பொதுவாக நடிகைகள் மீது பல கிசுகிசுக்கள், விதவிதமான செய்திகள் அதிகம் வருவதுண்டு. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த இமேஜ் வளையத்திலும் சிக்காமல், சினிமாவிலும் தனது முதலிடத்தை இழக்காமல் பாதுகாத்து வந்தவர் நயன்தாரா. திருமணத்திற்குப் பின்பும் அதே முன்னணி நடிகையாக வலம் வருவார் என்றே எதிர்பார்க்கலாம்.