தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

1940களில் வெள்ளித்திரையில் வசூல் சக்கரவர்த்தியாக மின்னியவர் எம் கே தியாகராஜ பாகவதர். இவர் நடித்து வெளிவந்த “ஹரிதாஸ்” திரைப்படம் 100 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த வேளையில், “வால்மிகி” மற்றும் “ஸ்ரீமுருகன்” ஆகிய இரு திரைப்படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகி, முன் பணமும் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், எம் கே தியாகராஜ பாகவதர் சிறை செல்ல நேரிட்டது.
பின்னர் தியாகராஜ பாகவதருக்கு மாற்றாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர் அவ்விரு திரைப்படங்களுக்கும் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவற்றில் ஒன்றான ஜுபிடர் பிக்சர்ஸ் “ஸ்ரீமுருகன்” திரைப்படத்தை முதலில் இயக்க ஒப்பந்தமானவர் இயக்குநர் ராஜா சந்திரசேகர். எம் கே தியாகராஜ பாகவதர் படத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட, இயக்குநர் ராஜா சந்திரசேகரும் படப்பிடிப்பிலிருந்து விலகிக் கொண்டார்.
அப்போது ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கதை வசனகர்த்தாவாக பணிபுரிந்து வந்த ஏ எஸ் ஏ சாமியை, படத்தின் தயாரிப்பாளர் சோமு “ஸ்ரீமுருகன்” படப்பிடிப்பை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். நல்ல எடிட்டரையும், ஒளிப்பதிவாளரையும் தருகிறேன். டெக்னிகல் சைடை அவர்கள் துணையோடு கவனித்துக் கொண்டு, நடிப்பையும், வசனத்தையும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள் என்று கூறி, ஏ எஸ் ஏ சாமியை நியமிக்க, அதன்படி, படத்தின் அசோஸியேட் இயக்குநரானார் ஏ எஸ் ஏ சாமி. படப்பிடிப்புத் தளத்திற்கு இவர் சென்ற முதல் நாள், சூரபத்மன் அவையிலே தோன்றும் காட்சி படமாக்கப்பட்டது.
தலையிலே மகுடம், இடையிலே வாள், அச்சுறுத்தும் மீசை, ஆறடி உயரம் என கம்பீரத் தோற்றத்தில் சூரபத்மனாக நடித்தவர் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ஆர் பாலு என்பவர். இவர் படத்திலிருந்து விலகிய இயக்குநர் ராஜா சந்திரசேகரின் நண்பர். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படத்திலிருந்து விலகிய செய்தி அறிந்த டாக்டர் பாலு, படத்தின் இயக்குநர் யார் என கேட்க, எடிட்டர் வி எஸ் நாராயணனுடன் ஏ எஸ் ஏ சாமி அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் என ஒருவர் கூற, யார் அந்த சின்னப் பையனா? என டாக்டர் பாலு அவரைப் பார்த்து கேட்க, அப்போதிருந்து படப்பிடிப்புத் தளத்தில் டாக்டர் பாலுவைப் பார்த்து அஞ்சியபடியே இருந்திருக்கின்றார் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி.
எம் சோமசுந்தரம் மற்றும் வி எஸ் நாராயணன் இயக்கத்தில், ஹொன்னப்ப பாகவதர், திருச்சூர் பிரேமாவதி, யு ஆர் ஜீவரத்னம், காளி என் ரத்னம், சி டி ராஜகாந்தம், டி வி குமுதினி, டி வி நாராயணசாமி, பி எஸ் வீரப்பா, சி கே சரஸ்வதி ஆகியோரது நடிப்பில், 1946ம் ஆண்டு தீபாவளி நாளன்று வெளியான இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் சிவனாக தோன்றி, தெலுங்கு நடிகை கே மாலதியுடன் இணைந்து சிவதாண்டவ நடனம் ஒன்றை ஆடியிருக்கின்றார்.
கடுமையான பயிற்சிக்குப் பின் எம் ஜி ஆர் ஆடியிருந்த இந்த நடனக் காட்சி படத்திற்கு மேலும் வலு சேர்த்திருந்தது. எம் ஜி ஆரின் இந்த சிறப்பான நடனக் காட்சியே, பின்னாளில் ஜுபிடர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான “ராஜகுமாரி”யில் அவருக்கு நாயகன் வாய்ப்பை பெற்றுத் தர ஒரு காரணமாகவும் அமைந்திருந்தது. இவ்வாறு படத்தோடு தொடர்பு கொண்டிருந்த திரைப் பிரபலங்கள் சிலருக்கு மாற்றங்களை ஏற்படுத்தித் தந்த இந்த “ஸ்ரீமுருகன்” திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாகவும் அமைந்திருந்தது.