மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் | 21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் | ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஊர்வசிக்கு சம்மன் | பிளாஷ்பேக்: சத்யராஜை ஹீரோவாக்கிய 'சாவி' | பிளாஷ்பேக்: தமிழில் சினிமாவான தெலுங்கு நாடகம் | ரஜினியின் அதிசய பிறவி பாணியில் தர்ஷன் நடிக்கும் படம் | முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் : பாடி முடித்து வைத்த இளையராஜா | கேரளாவில் 'காந்தாரா 2' வெளியீடு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது | தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர் |
தனது சிம்மக் குரலால், பல பக்க வசனங்களையும் பலரும் புருவம் உயர்த்தி, வியந்து பார்க்கும் வண்ணம், ஒரே டேக்கில் ஏற்ற இரக்கத்தோடு பேசி, தனது உணர்ச்சிபூர்வமான நடிப்பை திரையில் பிரதிபலித்து, நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து, ஒரு ஆற்றல் மிகு திரைக்கலைஞராகவே பார்க்கப்பட்டு வந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். ராஜா ராணி, புராண, இதிகாச, பக்தி மற்றும் சமூகக் கதைக் களங்களில் பல்வேறுபட்ட கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, நடிப்பின் அகராதியாகவே மாறிப்போன இவர், நகைச்சுவை நடிப்பிலும் தன்னால் உச்சம் தொட முடியும் என நிரூபித்த அவரது பல நகைச்சுவைத் திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த “கலாட்டா கல்யாணம்”.
1968ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், பல முதன்மைகளுக்கு காரணமான ஒரு திரைப்படம் என்றால் அது மிகையன்று. 1962ம் ஆண்டு நடந்த சீன-இந்தியப் போரின் போது நிதி திரட்டும் பொருட்டு, 'சித்ராலயா' கோபு எழுதி, மேடையேற்றப்பட்ட ஒரு மேடை நாடகம்தான் இந்த “கலாட்டா கல்யாணம்”. நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இதை ஒரு திரைப்படமாக எடுத்தால் என்ன? என்று அவருக்குள் எழுந்த ஆர்வம்தான் இந்த நாடகம் திரைப்படமாக உருவாக காரணமானது. இயக்குநர் ஸ்ரீதரின் 'சித்ராலயா' நிறுவனத்தைத் தவிர வேறெங்கும் பணிபுரியாதிருந்த 'சித்ராலயா' கோபு, ஒரு வெளி தயாரிப்பு நிறுவனத்திற்காக பணிபுரிந்த முதல் திரைப்படமாக அமைந்ததும் இந்த “கலாட்டா கல்யாணம்” திரைப்படம்தான்.
இயக்குநர் ஸ்ரீதரின் சகோதரரும், இயக்குநருமான சி வி ராஜேந்திரன், நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து இயக்கிய முதல் திரைப்படமாக வெளிவந்ததும் இந்த “கலாட்டா கல்யாணம்” தான். சிவாஜிகணேசன் தனது மகன் ராம்குமார் பெயரில் “ராம்குமார் பிலிம்ஸ்” என்ற பதாகையின் கீழ் தயாரித்த முதல் திரைப்படமாகவும் அமைந்திருந்தது இந்த “கலாட்டா கல்யாணம்”. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்” என்ற பாடலை, சென்னை அண்ணா நகர், அண்ணா டவரில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது இந்த “கலாட்டா கல்யாணம்” திரைப்படமே.
1965ஆம் ஆண்டு “வெண்ணிற ஆடை” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி, பின் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் எம் ஜி ஆருடன் ஜோடி சேர்ந்ததிலிருந்து, தொடர்ந்து பெரும்பாலான எம் ஜி ஆரின் திரைப்படங்களிலேயே நாயகியாக நடித்து வந்த செல்வி ஜெ ஜெயலலிதா, சிவாஜியுடன் இணை சேர்ந்து, நாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படமும் இந்த “கலாட்டா கல்யாணம்”.
நாயகியாக எம் ஜி ஆருடன் மட்டுமே அப்போது நீண்ட திரைப்பயணம் மேற்கொண்டிருந்த செல்வி ஜெ ஜெயலலிதா, தற்போதுதான் சரியான இடத்திற்கு வந்திருக்கின்றார் என்பதை விளக்கும் விதமாக, இத்திரைப்படத்தில் நாயகியின் அறிமுகப் பாடலான “நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி, இன்று முதல் இனிய சுகம் பெறவேண்டும் வண்ண மலர் மேனி” என்று ஆரம்பமாகும் கவிஞர் வாலியின் பாடலை, சிவாஜி ஒரு மேடான பகுதியில் நின்றிருக்க, ஜெயலலிதா கீழிருந்து பல படிக்கட்டுகளைக் கடந்து சென்று சிவாஜியின் அருகே சென்றதும், சிவாஜி பாடலை ஆரம்பிப்பது போல் காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குநர் சி வி ராஜேந்திரன். இத்தனை முதன்மைகளையும், சிறப்புகளையும் கொண்டிருந்த இந்த “கலாட்டா கல்யாணம்” திரைப்படம், நாடகத்தைக் காட்டிலும் பல மடங்கு வரவேற்பு கிடைக்கப் பெற்று, ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, 1968ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளிவந்து, ஒரு மாபெரும் வெற்றியை சுவைத்தது.