நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
மறைந்த நடிகர் விசுவின் தங்கை புவனேஸ்வரி கணவரும், குடும்பம் ஒரு கதம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான குரியகோஸ் ரங்கா நேற்றுமுன்தினம் காலமாகி உள்ளார். சென்னையில் நேற்று அவரின் இறுதி சடங்குகள் நடந்தன. நாடக, சினிமா நடிகர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பொறியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ரங்கநாதன் என்கிற குரியகோஸ் ரங்கா.
1950ம் ஆண்டு விழுப்புரத்தில் பிறந்தவர் ரங்கா. திருச்சியில் அத்தை வீட்டில் தங்கி படித்தார். பின்னர், கோவையில் இன்ஜினியரிங் படித்தார். அப்போதே பல மேடை நாடகங்களை எழுதி பிரபலம் ஆனார். அடுத்து சென்னையில் பணியாற்றினார், சொந்த தொழிலும் செய்து வந்தார். அப்போது இயக்குனர் விசு யுஏஏவில் இருந்து விலகி தனி நாடகக்கம்பெனி தொடங்கினார். அதில் இணைந்தார் குரியகோஸ் ரங்கா.
அந்த விஸ்வசாந்தி நாடக குழுவில் உறவுக்கு கைகொடுப்போம், மோடிமஸ்தான் போன்ற நாடகங்களில் பிரதான வேடத்தில் நடித்தார். உறவுக்கு கை கொடுப்போம் நாடகம்தான் பிற்காலத்தில் ஏவிஎம் தயாரிப்பில், விசு நடிப்பு இயக்கத்தில் சம்சாரம் அது மின்சாரம் படமாக வந்தது. அவள் சுமங்கலிதான் என்ற நாடகத்தில் குரியகோஸ் என்ற கேரக்டரில் மலையாளியாக சிறப்பாக நடித்ததால் ரங்கநாதன் பிற்காலத்தில் குரியகோஸ் ரங்காவாக மாறினார்.
இந்த பெயரை அவருக்கு அளித்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். இந்த நாடகம் இதே பெயரில் வந்தபோது அவர் கேரக்டரில் சந்திரசேகர் நடித்தார். பின்னர், ஊருக்கு உபதேசம் என்ற படத்துக்கும் குரியகோஸ் கதை எழுதினார். காத்தாடி ராமமூர்த்தி நாடக குழுவிலும் இவர் பணியாற்றினார். டவுரி கல்யாண வைபோகமே நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் பிற்காலத்தில் டவுரி கல்யாணம் என்ற பெயரில் சினிமாவானது. 1981ல் வெளியான விசு கதை எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் நடிகர் ஆனார்.
காம்பவுண்ட் வீடுகள் குறித்த அந்த படத்தில் வீட்டு ஓனர் கவுண்டமணியால் அல்லல் படும், வராண்டாவில் வசிக்கும் அப்பாவியாக சிறப்பாக நடித்து இருப்பார் ரங்கா. விசுவுக்கும், அவருக்குமான கடித பிழை வசனங்கள், வெளியூரில் வசிக்கும் தன் மனைவிக்கு அவர் கடிதம் எழுதும் காட்சிகள், டிரான்ஸ்பர் குறித்து பேசும் காட்சிகள் இன்றும் பிரபலம்.
பின்னர், மோடிமஸ்தான் என்று விசு நாடகம், மணல்கயிறு படமாக 1982ல் மாறியது. கவிதாலயா தயாரித்த அந்த படத்தில் லட்சுமணசாமி, ராமசாமியாக அவர் நடித்தார். அந்த படத்தில் எஸ்.வி.சேகர் மாமனராக நடித்த அந்த காட்சிகளும் பிரபலம். இந்த படங்கள் தவிர, கண்மணி பூங்கா, வாய்சொல்லில் வீரநாடி படங்களிலும் நடித்தார். இவர் எழுதி கீழ்வானம் சிவக்கும் என்ற நாடகம்தான், கீழ்வானம் சிவக்கும் என்ற பெயரில் சினிமாவாக மாறியது. மோகன் நடித்த நாலுபேருக்கு நன்றி படமும் இவர் எழுதிய கதைதான். சிவாஜி, சத்யராஜ் நடித்த முத்துகள் மூன்று படமாக வந்தது. விசு படங்களில் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றினார். இதை விட இவர் சாதனைகளில் முக்கியமானது பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர் இவரே.
இவர் பல இசை ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். பல குறும்படங்களை இயக்கினார். காஞ்சி பெரியவர் பெருமை சொல்லும் காமகோடி என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்தார். ரங்கா, புவனேஸ்வரி தம்பதிகளுக்கு கார்த்திக், தீபக், பிரீத்தா என்று 3 வாரிசுகள் உள்ளனர். ஒரு நல்ல படத்தை இயக்க முயற்சித்த வேளையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காலமானார். நேற்று இறுதிசடங்குகள் சென்னையில் நடந்தன.