ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் திரைப்படங்களில் தலைசிறந்த முதல் பத்துப் படங்களைப் பட்டியலிடச் சொன்னால், அப்பா, மகன்கள் என மூன்று வேடங்கள் ஏற்று, வித்தியாசமான தோற்றப் பொலிவில் சிவாஜிகணேசன் நடித்திருந்த “தெய்வமகன்” திரைப்படத்தைத் தவிர்த்து யாராலும் வரிசைப்படுத்த முடியவே முடியாது. அதேபோல் சிவாஜியை வைத்து பெரும்பாலான படங்களை இயக்கிய இயக்குநர்களான பி ஆர் பந்துலு, ஏ பீம்சிங், ஸ்ரீதர், பி மாதவன், சி வி ராஜேந்திரன், கே விஜயன் போன்றோரின் வரிசையில் இயக்குநர் ஏ சி திருலோகசந்தருக்கு என ஒரு தனி இடம் எப்போதும் இருப்பதுண்டு. அதிகப்படியான சிவாஜிகணேசனின் திரைப்படங்களை இயக்கிய பெருமைக்குரிய இயக்குநராக அறியப்படும் இயக்குநர் ஏ சி திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் இந்த “தெய்வமகன்”.
நிஹார் ரஞ்சன் குப்தா என்ற வங்காள மொழி எழுத்தாளர் எழுதிய “உல்கா” என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இந்த “தெய்வமகன்”. 1957லிலேயே இந்தக் கதையை அதே பெயரில் வங்காள மொழியில் திரைப்படமாகவும் எடுத்திருந்தனர். தொடர்ந்து 1962ம் ஆண்டு கன்னட மொழியில் “தாயி கருலு” என்ற பெயரிலும், 1963ம் ஆண்டு “மேரி சூரத் தேரி ஆங்கேன்” என ஹிந்தியிலும், 1965ல் “தாயின் கருணை” என தமிழிலும் இதே கதை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை திரைப்படங்களும் பெரிய அளவில் பேசப்படாமலும், வெற்றி என்ற இலக்கைத் தொட முடியாமலும் இருந்த நிலையில், மீண்டும் இதே கதையை கையில் எடுத்து, அதன் திரைக்கதையில் மட்டும் சிற்சில மாற்றங்கள் செய்து, நடிகர் திலகம் சிவாஜிகணேசனை அப்பா, இரு மகன்கள் என மூன்று வெவ்வேறு வேடங்களில் நடிக்க வைத்து, “தெய்வமகன்” ஆக்கித் தந்தார் இயக்குநர் ஏ சி திருலோகசந்தர்.
படத்தின் தயாரிப்பாளரான பெரியண்ணன் இத்திரைப்படத்தை முதலில் வண்ணத்திரைப்படமாக உருவாக்கத் திட்டமிட, சிவாஜிகணேசன் ஆலோசனையின் கீழ், இத்திரைப்படம் கருப்பு வெள்ளை திரைப்படமாக எடுக்கப்பட்டது. காரணம் இந்தப் படத்தின் கதை என்பது, முகக் குறைபாடுகளோடு இருக்கும் 'கண்ணன்' என்ற கதாபாத்திரத்தைச் சுற்றிச் சுழலுவதால், அந்தக் கதாபாத்திரத்தின் மீது படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு வெறுப்பு வராத வண்ணம், அனுதாபம் மட்டுமே வரவேண்டும் என்றால் அதற்கு கருப்பு வெள்ளையில் எடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கணித்துக் கூற, அவர் கூறியபடியே, அவரது கணிப்பும் தப்பவில்லை.
மேலும் படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஏற்று நடித்திருந்த மூன்று கதாபாத்திரங்களும் மூன்று வெவ்வேறு மனிதர்கள் என பார்வையாளர்கள் நம்பும் அளவிற்கு அவரது உடல் மொழி, நடை, உடை, பாவனை என அனைத்திலும் தனது அபார நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விதமும், இயக்குநர் ஏ சி திருலோகசந்தரின் நேர்த்தியான திரைக்கதையும் படத்தின் வெற்றியை உறுதி செய்திருந்தது.
1969ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்து ஓடி, வசூல் ரீதியாக ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றதோடு, 42வது அகாடமி விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான வரிசையில், சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற திரைப்படமாக இன்றும் நாம் கொண்டாடி மகிழும் திரைப்படம்தான் இந்த “தெய்வமகன்”.




