நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
இயக்குநர் ப நீலகண்டனின் “தியாக உள்ளம்” என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, ஏ வி மெய்யப்ப செட்டியார் தயாரித்து, இயக்கி 1947ல் பொங்கல் பரிசாக வெளியிட்ட திரைப்படம்தான் “நாம் இருவர்”. 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன் சிறை சென்றிருந்த நேரத்தில், நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் இந்த நாடகத்தை “நாம் இருவர்” என்ற பெயரில் என் எஸ் கே நாடக சபா சார்பில் அரங்கேற்றி வந்திருந்தார். தேசத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த விடுதலை வேட்கைத் தீயை மனதிற் கொண்டு, “அச்சமில்லை! அச்சமில்லை!”, “விடுதலை விடுதலை!”, “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!” போன்ற பாரதியாரின் பாடல்களை, பொருத்தமான இடங்களில் நாடகத்தில் இடம்பெறச் செய்து, நாடகத்தை வெற்றிகரமாக நடத்தியும் வந்தார் நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம்.
இந்தச் சூழலில், மகாகவி பாரதியின் பாடல்களுடன் “நாம் இருவர்” நாடகத்தை திரைப்படமாக்கி வெளியிட்டால், அது நிச்சயம் வெற்றி பெறும் என்றுணர்ந்த ஏ வி மெய்யப்ப செட்டியார், இயக்குநர் ப நீலகண்டனை வரவழைத்து, உங்கள் கதையை படமாக்க விரும்புகிறேன் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்து, கதைக்கான தொகையை அவரிடம் கொடுத்ததோடு மட்டுமின்றி, தான் எடுக்க இருக்கும் “நாம் இருவர்” திரைப்படத்திற்கு உதவி இயக்குநராகவும் அவரையே நியமிக்க, உடனே சினிமாவிற்கு ஏற்றவாறு தனது நாடகத்தை எழுதத் தொடங்கினார் இயக்குநர் ப நீலகண்டனும்.
நாடகக் கதையில், கதையை விட அதில் இடம் பெற்றிருந்த பாரதியாரின் பாடல்கள்தான் அந்நாடகத்தின் வெற்றிக்குக் காரணம் என்றுணர்ந்த ஏ வி மெய்யப்ப செட்டியார், படத்திலும் அப்பாடல்கள் இடம்பெறச் செய்ய விரும்பி, அந்தப் பாடல்களின் உரிமையை வாங்கி வைத்திருந்த “சுராஜ்மல் அன் சன்ஸ்” என்ற கிராமபோன் கம்பெனியை தொடர்பு கொண்டு ரூபாய் பத்தாயிரம் தந்து, அந்தப் பாடல்களின் உரிமையையும் பெற்றுவிட, அதன் பின் தேவகோட்டை ரஸ்தா “ஏ வி எம் ஸ்டூடியோ”வில் “நாம் இருவர்” திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமானது.
நாடகத்தில் நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் ஏற்று நடித்திருந்த அதே வேடத்தை திரைப்படத்திலும் நடிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். அதன்படி ஒரே ஒரு முறை படப்பிடிப்பிற்கு வந்த நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம், சென்னையில் என் எஸ் கே நாடக சபா பொறுப்புகளை கவனிக்க வேண்டியிருப்பதால், இந்தப் படத்தில் நடிப்பதற்காக காரைக்குடி வந்து செல்ல இயலாது என கூறி, படத்திலிருந்து விலக, பின் நடிகர் டி ஆர் மகாலிங்கத்தை அந்த வேடத்தில் நடிக்க வைத்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார்.
நடிகர் வி கே ராமசாமி, டி கே ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் நாடகங்களில் அவரவர் ஏற்று நடித்திருந்த அதே வேடங்கள் தரப்பட்டிருந்தன. கே சாரங்கபாணி, டி ஏ ஜெயலக்ஷ்மி, டி ஆர் ராமச்சந்திரன், பி ஆர் பந்துலு, குமாரி கமலா ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படத்தில் நடித்திருந்தனர். மகாகவி பாரதியின் பாடல்களுடன், கே பி காமாட்சி, வீரநாதக் கோனார் ஆகியோரின் பாடல்களும் இடம் பெற்றிருந்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆர் சுதர்ஸனம் இசையமைத்திருந்தார். படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமான பாரதியாரின் பாடல்கள் டி கே பட்டம்மாள் குரலில் கணீரென ஒலித்து, கேட்போரின் செவிகளுக்கு தேனாய் அமைந்திருந்தன.
“வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே”, “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” ஆகிய பாடல்களில் குமாரி கமலாவின் நடனமும் சிறப்பாக அமைந்து, பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. 1947ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்த இத்திரைப்படம், மகாகவி சுப்ரமணிய பாரதியின் ஆண்டு விழாவில் ஆரம்பமாகி, காந்திஜியின் 77வது பிறந்த நாள் நிகழ்வோடு நிறைவு பெறுமாறு இயக்கியிருந்த ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு இது ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்திருந்தது.