மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(91) வயது மூப்பு காரணமாக சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று மாலை காலமானார். "வாழ வைத்த தெய்வம்" என்ற படம் மூலம் வசனகர்த்தவாக அறிமுகமான இவர், சிவாஜி நடிப்பில் வெளியான ‛பாசமலர்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அன்றைய திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனம், கதை, திரைக்கதை அமைத்துள்ள இவர் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதி உள்ளார். கடைசியாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கு வசனம் எழுதினார்.
ஆரூர்தாஸின் உடல் சென்னை, தி.நகரில் நாதமுனி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நடிகர்கர் சிவகுமார், பாக்யராஜ், மனோபாலா, வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கமல் இரங்கல்
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் பதிவு : ‛‛ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும் கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி'' என்றார்.
நடிகர் சங்கம் இரங்கல்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை : ‛‛ தமிழ் திரையுலகின் பிதாமகர் ஆரூர் தாஸ் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் திரையுலக வரலாற்றில் அவர் செய்த சாதனைகள் அளப்பரியது. ஆயிரம் படங்களுக்கு மேல் தனது தமிழ் வசனங்களால் பெரும் புரட்சி செய்தவர்.
அவரது வசனத்தில் வெளியான விதி படம் திரையை தாண்டி ஆடியோ கேசட்டுகளில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததை யாராலும் மறக்க முடியாது. கலைமாமணி விருதை பெற்றவர். தமிழக அரசு சார்பில் கலைஞர் நினைவாக வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான கலைத்துறை வித்தகர் விருதை முதலில் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது தமிழ் திரைத்துறைக்கே கிடைத்த பெருமை.
ஆரூர் தாஸ் ஐயா அவர்கள் மறைந்தாலும் அவரது ஆழமான வசனங்களால் தமிழ் திரைத்துறை இருக்கும் வரை அவர் புகழ் நீடித்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ,தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அப்பாவுக்கு அஞ்சலி" - எம்எஸ்பாஸ்கர்
நடிகர் எம்எஸ் பாஸ்கர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை
தமிழ் ஓய்ந்ததோ?
தன்னிகரற்ற எழுத்து சாய்ந்ததோ?
தமிழை தங்கு தடையின்றி, பிழையறப்பேச இந்த எளியவனுக்கு படிப்பித்த என் 'ஆசான்' விண்ணுலகம் சென்றாரோ...?
"டேய்..பாஸ்கரா" என்று என்னை அன்போடு அழைத்த அக்குரலை இனி எப்பிறப்பில் கேட்பேன்?
அரவணைத்தும், கண்டித்தும் என்னை வழி நடத்திய என் குருநாதர் அமரரானாரோ?
இந்நிலையல்ல... எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றி விட்ட ஏணி அவரன்றோ..?
மறக்க இயலுமோ? என் இறுதி மூச்சு உள்ளவரை 'அப்பா' தங்களை மறக்க இயலுமோ?
தாங்கள் பேசாவிட்டாலும் தங்கள் வசனங்கள் காலாகாலத்திற்கும் பேசப்படுமன்றோ..?
மீண்டும் தங்கள் வசனங்களை தாங்கள் சொல்லித்தர தங்கள் முன்பு நின்று தங்கள் சீடன் நான் 'டப்பிங்' பேசுவேனா?
"சென்று வாருங்கள் அப்பா"...
மாதாவின் நிழலில் இளைப்பாற...
கண்ணீருடன்
தங்கள் மாணாக்கன்,
எம்.எஸ்.பாஸ்கர்.